
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய தேசிய கல்வி கொள்கை (NEP) அடிப்படையில், முதலாம் வகுப்பிலிருந்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுவரை இடைநிலை நிலைமை முதல் செயல்பட்ட மும்மொழி கொள்கை இப்போது தொடக்க நிலை முதல் அமல்படுத்தப்பட உள்ளதால், மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளிலும் இந்தி பயிற்சி கட்டாயமாக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த முடிவுக்கு முதன்முறையாக கடும் எதிர்ப்பு வெளியிட்டவர், மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே ஆவார். அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “இந்தி எந்தவிதமான தேசிய மொழியும் அல்ல; அது மற்ற மாநில மொழிகளைப் போன்று ஒன்றே.
இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் இந்துக்கள் தான், ஆனால் இந்திக்காரர்கள் அல்ல,” என தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் இந்தி மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுமானால் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.