ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததாக இந்தியா கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழலில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து வருத்தம் தெரிவித்தாலும், இந்தியா பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதற்கு ஆதாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது பற்றி அப்ரிடி கூறியதாவது, “இந்தியாவின் பாகிஸ்தான் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. முதலில் இந்தியா தக்க ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் அணுகுமுறை சரியானதல்ல,” என்றும் அவர் பேசினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே குறைக்க முடியும் என்று அப்ரிடி நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளும் சண்டையைத் தவிர்த்து, உரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே தனது கருத்து என்று அவர் கூறினார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தானுடன் பல முக்கியமான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, சார்க் விசா சலுகைகளை ரத்து செய்தது மற்றும் உயர் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தது என்பவை இந்த நடவடிக்கைகளில் முக்கியமானவை. இந்தியாவின் இந்த கடுமையான நடவடிக்கைகள் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அப்ரிடி இந்தியாவிடம் ஆதாரம் கேட்டுள்ளது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.