
இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையே ரூ.63,000 கோடி மதிப்பிலான மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் திங்கட்கிழமை டெல்லியில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் எம் கடல்சார் போர் விமானங்களை பிரான்சிலிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதுவர் கையெழுத்திட உள்ளனர். மேலும், இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் காணொளி காட்சி மூலம் சந்திப்பு நடத்த உள்ளனர். முன்னதாக திட்டமிடப்பட்ட பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சரின் இந்திய பயணம் உடல்நலக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
இந்த புதிய ரஃபேல் எம் விமானங்கள் இந்திய கடற்படையின் பலத்தையும் விமானம் தாங்கிக் கப்பல்களின் திறனையும் அதிகரிக்க உதவும். தற்போது இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல்களில் மிக்-29 கே போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பராமரிப்பு சிக்கல்கள் காரணமாக அவை சரிவர செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை மாற்றாக, உடனடியாக தேவைப்படும் ரஃபேல் எம் விமானங்கள் மூலம் இந்திய கடற்படை எதிரி கப்பல்களை குறிவைக்கும் தூரஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை அதிகரிக்க முடியும்.
இந்த ஒப்பந்தம் தற்காலிக தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தியா தற்போது தனது சொந்த இரட்டை எஞ்சின் போர் விமானம் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த தளம் சார்ந்த விமானம் தயாரிக்க இன்னும் சுமார் 10 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, ரஃபேல் எம் போர் விமானங்கள் இந்திய விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து செயல்பட்டு நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மேலும் தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போர் நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சூழ்நிலையில் தற்போது இந்தியா போர் விமானங்களை வாங்க இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.