மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைசன் பகுதியைச் சேர்ந்த கபில் ராஜ்புத் என்ற இளைஞர், ஒரு பெண்ணும், அவரது நண்பர்களும் சேர்ந்து தன்னை பாலியல் வழக்கில் மாட்டிக்கொள்ளச் செய்து, மிரட்டி பணம் பறித்ததாகக் கூறி டி.டி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கபிலின் கூற்றுப்படி, அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஜனவரி மாதம், ஒரு போலியான பாலியல் குற்றச்சாட்டு மனுவை டி.டி. நகர் காவல் நிலையத்தில் தாக்கல் செய்துள்ளார். பின்னர், ஜீத்து மற்றும் சச்சின் என்கிற இருவர் தொடர்பு கொண்டு, வழக்கை தற்காலிகமாக முடிக்க ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்று மிரட்டினார்கள். ஜனவரி 22ம் தேதி, சச்சின் மற்றும் அவரது நண்பர், கபிலை நேரடியாக போலீஸ் கமிஷனரின் அலுவலகத்துக்கே அழைத்து, பணத்தை வாங்க ஏற்பாடு செய்தனர்.

கபில் மற்றும் அவரது சகோதரர் பிரதீப், பணத்தைத் தங்கள் கையால் கொண்டு வந்த போது, சச்சின் அனுப்பிய நபரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர். இதற்கு முன்னர், வழக்கு வாபஸ் பெற்றுவிட்டதாக உறுதி அளிக்கப்பட்டதாம். ஆனால் சமீபத்தில், மீண்டும் அந்த பெண்கள் குழு, மேலும் ரூ.5 லட்சம் கோரியதைத் தொடர்ந்து, கபில் நேரடியாக டி.டி. நகர் காவல் நிலையத்தில் முறையீடு செய்துள்ளார். தற்போது போலீசார் முழு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதிகாரிகளின் அலுவலகத்திலேயே பணம் வாங்கியிருக்கின்றனர் என்பதும், இந்த மிரட்டல் மோசடியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.