
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி துறைமுகத்தில் போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த போலீஸ் நிலைய வளாகத்திற்குள் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலை படையினர் நுழைந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு தள்ளியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 1ரேஞ்சர்,2 போலீசார், 1 சுகாதார பணியாளர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தும் 14 பேர் காயம் அடைந்தும் உள்ளனர்.
இது குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் அலுவலக கட்டிடத்தின் வழியாக இறங்கி பயங்கரவாதிகளுடன் பல மணி நேரம் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இந்த பதில் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கூறியதாவது “பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்க வேண்டும். மேலும் பயங்கரவாதிகள் நீதியின் முன் கொண்டு வந்து கொல்லப்படுவார்கள். பயங்கரவாதத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கராச்சி தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தலிப்பான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “கராச்சி போலீஸ் அலுவலகத்தை குறி வைத்தே தாக்குதல் நடத்தினோம்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை கச்சிதமாக செய்து முடித்த போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அவர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது “பயங்கரவாதிகள் மீண்டும் கராய்ச்சியை குறிவைத்து தாக்கியுள்ளனர். இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். போலீஸ் மற்றும் சட்ட அமலாக்கல் அமைப்புகளின் மன உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது. பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுபட கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.