சென்னையின் பழவந்தாங்கல் பகுதியில், போலீஸ் என அறிமுகம் செய்து பெண்ணிடம் மிரட்டி தங்க வளையலை பறித்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரசுந்தரி என்ற 42 வயதான பெண், தனது கார் ஓட்டும் பயிற்சிக்காக வாடகை ஓட்டுநருடன் வேளச்சேரிக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இருவரும் காரில் பேசிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தன்னை போலீஸ் என கூறி, அவர்கள் மீது சந்தேகத்துடன் நடந்துகொண்டு மிரட்டினார்.

அந்த நபர், வாடகை ஓட்டுநரை கீழே இறக்கி விட்டு, திரிபுரசுந்தரியை மிரட்டி கார் ஓட்டச் சொல்லியுள்ளார். பின்னர், நங்கநல்லூர் 3வது மெயின் ரோட்டில் காரை நிறுத்தச் சொல்லி, அவரிடம் அணிந்திருந்த 1 சவரன் தங்க வளையலை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதையடுத்து, திரிபுரசுந்தரி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.

விரைவான விசாரணையில், நுங்கம்பாக்கம் தெய்வநாயகம் தெருவைச் சேர்ந்த கனகராஜ் (வயது 48) என்ற நபர் நகையை பறித்து சென்றது தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து திரிபுரசுந்தரியின் 1 சவரன் தங்க வளையலையும், பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்தனர்.