
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி கிராமத்தில் காசியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டிக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது மகன் பணம் அனுப்பி வைத்துள்ளார். காசியம்மாள் பணத்தை எடுப்பதற்காக அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த வாலிபரிடம் பத்தாயிரம் ரூபாய் எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அந்த வாலிபரும் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு காசியம்மாளின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறு ஒரு ஏடிஎம் கார்டை கொடுத்து அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த வாலிபர் காசியம்மாளின் கார்டை பயன்படுத்தி பல்வேறு ஏடிஎம்களில் 46 ஆயிரம் ரூபாய் பணம் வரை மோசடி செய்துள்ளார். பணம் எடுக்கப்பட்டது தொடர்பான குறுஞ்செய்தி காசியம்மாளின் மகனுக்கு வந்ததால் சந்தேகமடைந்த அவர் தனது தாயை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதன் பிறகு தான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து காசியம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணத்தை மோசடி செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.