
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களாக குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி ஆயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாக 14ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இந்த மாதம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் குடும்ப தலைவிகளுக்கு முன்கூட்டியே ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் நவம்பர் 9 அல்லது 10 ஆகிய தேதிகளில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் குடும்ப தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் மேல்முறையீடு செய்த தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு இந்த மாதத்தில் இருந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.