
கோயம்புத்தூர் அருகே அரிசிபாளையத்தை சேர்ந்த 53 வயதான அரசு பள்ளி ஆசிரியை பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழுக்குப்பாறை அருகே உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்த பத்மா, கடந்த 18-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது மகன் லட்சுமி நாராயணன், வேறு ஒரு ஆசிரியையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் அந்த நாளில் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. உடனடியாக மதுக்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் போலீசார் விசாரணை நடத்தியதில் நாச்சிபாளையம்–வழுக்குப்பாறை சாலையில் உள்ள தனியார் தோட்டம் அருகே பத்மாவின் சடலம் மீட்கப்பட்டது. வீட்டிலிருந்து கிளம்பும் போது, அவர் தன்னுடைய செல்போனையும், அணிந்து வரும் நகைகளையும் கழற்றி வைத்துவிட்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகிலுள்ள பெட்ரோல் பங்கில், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பியதும், மேலும் ஒரு வாகனத்திற்காக எனக்கூறி கேனில் பெட்ரோல் வாங்கியதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. கடந்த சில மாதமாக மகளின் திருமணம் தாமதம், மகனின் எதிர்காலம் குறித்த கவலை, குடும்ப செலவுகளை சந்திக்க இயலாத மன அழுத்தம் போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் மனதளவில் சோர்ந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.