
சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி பல்ஜிபாளையம் அப்பாராஜி தெருவில் மகாராஜா(58)- சௌந்தரவள்ளி(51) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மூன்றாவது மகளுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கிடையே மாப்பிள்ளை பார்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
சௌந்தரவள்ளி எனது சொந்தத்தில் தான் மகளை கட்டிக் கொடுப்பேன் என கூறினார். அப்போது போதையில் இருந்த மகாராஜா கோபத்தில் கத்தியால் தனது மனைவியின் தலை, கழுத்து, முதுகு ஆகிய இடங்களில் வெட்டி கொடூரமாக கொலை செய்தார். அதன் பிறகு காவல் நிலையத்திற்கு சென்று மனைவியை கொலை செய்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சௌந்தரவள்ளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போதை தெளிந்த மகாராஜா கோபத்தில் மனைவியை கொலை செய்துவிட்டேன். நான் ஜெயிலுக்குப் போய்விட்டால் குழந்தைகள் அனாதையாகி விடுவார்கள் என கூறி போலீஸிடம் கதறி அழுதார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.