தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகள் மற்றும் மனிதர்களை காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான். நாய்களுக்கு பிறந்த முதல் ஆண்டில் இரண்டு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் ஒரு முறை தடுப்பூசியை செலுத்துவது அவசியம். தமிழகத்தில் ஆண்டு தோறும் நாய்க்கடியால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்படுவதில்லை.

ஆனால் அத்தகைய வைரசால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு மற்றும் பூனை உள்ளிட்ட விலங்குகள் கிடைக்கும் போது ரேபிஸ் தொற்று ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்கு உடனடியாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக நோய் பரவாமல் தடுக்க முடியும். தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.