
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் பொருட்களை பெற கைவிரல் ரேகை பதிவு அவசியம். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு சென்றடைவது உறுதி செய்யும் விதமாகவும், குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை உறுதி செய்யும் விதமாகவும் கைவிரல் ரேகை பதிவின் மூலம் உறுதி செய்யும் பணியானது நடந்து வருகிறது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யாத PHH, AYY குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.