உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விபின்(32), சர்வன்குமார்(25), சுதீர்வர்ஷன்(26) ஆகியோர்  செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியம் பகுதியில் தங்கி இருந்து கட்டுமான வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் மூன்று பேரும் தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகிலேயே இரும்பு தகரத்தினால் கூரை அமைத்து தங்கி இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு மூன்று பேரும் தூங்கிவிட்டனர்.

மறுநாள் அதிகாலை மின் கசிவால் கூரையில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சர்வன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபின், சுதீர்வர்ஷன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.