கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில், விற்பனைக்காக வைத்திருந்த 8 டன் தர்பூசணி பழங்களில் செயற்கை ரசாயன நிறமூட்டிகளை ஊசி மூலம் செலுத்திய சம்பவம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் முத்து மாரியப்பன், பிரகாஷ் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் குழுவாக 7 பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், 3 கடைகளில் நிறமூட்டிய பழங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பழங்களைப் பறிமுதல் செய்து, நிலத்தில் குழி தோண்டி புதைத்து அழித்தனர். மேலும், 3 வியாபாரிகளுக்கு ரூ.5,000 மற்றும் ரூ.2,000 என அபராதங்கள் விதிக்கப்பட்டன.

விற்பனை அதிகரிக்க நம்பிக்கையை உருவாக்கும் வகையில், வியாபாரிகள் ‘எரித்ரோசின்’ என்ற ரசாயன செயற்கை நிறமூட்டியை தர்பூசணிகளில் ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது பொதுமக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு தலைவலி, காய்ச்சல், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தர்பூசணி வாங்கும் பொழுது, அதில் சிறு துண்டு வெட்டி நீரில் போட்டு பார்ப்பதோடு, டிஸ்பூ பேப்பர் அல்லது பஞ்சால் துடைத்து செயற்கை நிறம் விழுகிறதா என பரிசோதனை செய்ய பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.