மும்பையைச் சேர்ந்த பிரபல மராத்தி நடிகர் சாகர் கராண்டே ஆன்லைன் மோசடியில் ரூ.61 லட்சம் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் ஒரு பெண் அனுப்பிய இன்ஸ்டாகிராம் லிங்கை லைக் செய்ததற்காக ₹150 பெற்ற அவர், அதனை தொடங்கி அதிக லாபம் வரும் முதலீடு வாய்ப்வை நம்பி முதலாக ரூ.27 லட்சம் முதலீடுசெய்துள்ளார்.

தொடர்ந்து பணம் கிடைக்கும் நம்பிக்கையில் மேலும் ரூ.19 லட்சம் மற்றும் வரி என்ற பெயரில் கூடுதலாக பணம் செலுத்தியுள்ளார்.

மொத்தமாக ₹61 லட்சம் செலுத்திய பின்னும், பணத்தை எடுத்துக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சாகர், இது மோசடியாக இருக்கலாம் என சந்தேகமடைந்து சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.

அவரிடம் பணம் பறிக்கப்பட்டது போலவே, மும்பையில் வசிக்கும் ஒரு குடும்ப பெண்ணும் பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் 50 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளார். நிஷா பைனான்ஸ் எனும் போலி நிறுவனம், தனிப்பட்ட மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் குழு மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி, மொபைல் ஆப் மூலம் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறி பணம் பெற்றுள்ளனர்.

முதல் முதலீட்டுக்கு லாபம் காட்டி நம்பிக்கை ஏற்படுத்திய அவர்கள், தொடர்ந்து லாபம் பெற  மேலும் பணம் கேட்டு, வரி, கமிஷன் போன்ற பெயர்களில் பணம் பெற்றனர். கடைசியில், பணம் எடுக்க முடியாமல் போனதால் மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனதும், சம்பந்தப்பட்ட பெண்ணும் சைபர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

சமூக ஊடகம் மற்றும் மெசேஜ் மூலம் நடக்கும் இத்தகைய மோசடிகளால் பொதுமக்கள் தொடர்ந்து கோடிக்கணக்கான பணத்தை இழந்து வருகிறார்கள் என்பதே இந்த சம்பவங்களின் முக்கிய எச்சரிக்கை ஆகும்.