இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வங்கி கணக்குடன் பான் கார்டு இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என சுகுணா என்பவரின் செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது.

மெசேஜில் வந்த லிங்கை சுகுணா கிளிக் செய்தவுடன் அவரின் வங்கி கணக்கில் இருந்த பணம் மொத்தமும் எடுக்கப்பட்டுள்ளது. போலியான லிங்க் அனுப்பி சுமார் 75 ஆயிரம் ரூபாய் பணம் அவரிடமிருந்து திருடப்பட்டது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது போன்ற மோசடிகளில் சிக்காமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.