வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பெங்கல் புயலாக மாறும் நிலையில் நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் ஏற்கனவே இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.