மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், நேற்று  புதிய ஆதார் செயலியை (Aadhaar App) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். இந்த செயலி, முக அடையாளம் (Face ID) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஆதார் சேவையை இந்தியர்களுக்கு மொபைல் வழியாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் பயணங்கள் மற்றும் பரிசோதனைச் சூழ்நிலைகளில் ஆதார் கார்டின் நகல் அல்லது பிரிண்ட் எடுத்து செல்ல வேண்டிய தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

அதிகாரப்பூர்வமாக X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இனிமேல் ஹோட்டல் ரிசெப்ஷன், கடைகள் அல்லது பயணத்தின் போது ஆதார் நகலை வழங்க தேவையில்லை. இந்த புதிய ஆதார் செயலி பாதுகாப்பானது மற்றும் பயனர் ஒப்புதலுடன் மட்டுமே பகிர இயலும்” என தெரிவித்துள்ளார். இந்த செயலி மூலம் மக்கள், தேவையான தரவுகளை மட்டும் பகிர முடியும்; இதன் மூலம் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

இந்த புதிய டிஜிட்டல் ஆதார் முயற்சி, UPI பேமெண்ட் போல் எளிமையான மற்றும் பாதுகாப்பான முறை மூலம் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செயலியின் மூலம், முகம் அடையாளமாக செயல்படுவதால், பைல், காப்பி அல்லது கார்டு எதுவும் தேவைப்படாது. இந்த முயற்சி, அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கான முக்கியமான அடுத்த கட்டமாகக் கருதப்படுகிறது. மேலும் UIDAI மற்றும் மத்திய அரசு இணைந்து இச்செயலியை உருவாக்கியுள்ளதோடு, மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் முழுமையாக வெளியிடப்படவுள்ளது.