ஜெய்ப்பூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மசாஜ் மற்றும் ஸ்பா மையங்களில் நடைபெறும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போலீசார் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர் காவல் ஆணையரகத்தில் முதன்முறையாக, இந்த மையங்களை ஒழுங்குபடுத்த 13 அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான விதிமுறைகள் தொகுப்பை கூடுதல் ஆணையர் டாக்டர் ரமேஷ்வர் சிங் வெளியிட்டுள்ளார்.

இந்த விதிமுறைகளின்படி, ஸ்பா மற்றும் மசாஜ் மையங்களில் ஆண் மற்றும் பெண் வாடிக்கையாளர்களுக்காக தனித்தனி பிரிவுகள் இருக்க வேண்டும். அறை கதவுகளில் உள்ளே பூட்டிக் கொள்ளும் latch இருக்கக்கூடாது.

முக்கிய வாயில் எப்போதும் திறந்திருக்கும் வகையில் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் வரும்போது அவர்களுடைய அடையாள விவரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் ஸ்பா மையங்களை நடத்துவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஊழியர்கள் அனைவரும் இயற்கை மருத்துவம், அகுபிரஷர், அல்லது occupational therapy போன்ற துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட தகுதியுடன் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வயதுடையவர்களாக இருக்க வேண்டும், குற்றப் பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழும் கட்டாயம்.

வேலை நேரங்களில் அடையாள அட்டையை அணிவது மற்றும் மையத்தின் உரிமம் மற்றும் விவரங்களை தெரியும் வகையில் வெளியே காண்பிக்க வேண்டும். இவ்விதிமுறைகள் சட்டபூர்வமாக செயல்படுவதற்கும், சட்டவிரோத flesh trade போன்ற செயல்களை தடுக்கவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.