நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணூர்பட்டி ஊராட்சி கோவிந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்வு காரணமாக இறந்த மூதாட்டி ஒருவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் மயானத்தில் குழி தோண்டும்போது, அங்கு எரிந்த நிலையில் 6 மண்டை ஓடுகள் மற்றும் பூஜை சாமான்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்..

மண்டை ஓடுகளுடன் அருகில் பூஜை தட்டு, செப்பு தகடுகள், செருப்பு உள்ளிட்டவை எரிக்கப்பட்டு கிடந்ததை பொதுமக்கள் பார்த்து பதற்றமடைந்தனர். தகவலறிந்ததும் விஏஓ மற்றும் புதுச்சத்திரம் போலீசார், ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி மற்றும் இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மந்திரவாதிகள் மயானத்தில் சடங்கு நடத்தி 10 நாட்கள் ஆனது என போலீசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. எரிந்த மண்டை ஓடுகள் எங்கிருந்து வந்தது என்பது குறித்தும், இதில் உள்ளூர் மக்கள் தொடர்புடையார்களா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சேலத்திலிருந்து தடயவியல் குழுவும் வரவழைக்கப்பட்டு, பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மயானம் செல்லும் வழியில் உள்ள சிசிடிவி கேமராக்களும் கைப்பற்றப்பட்டு மர்ம நபர்கள் யார் என்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.