திமுக அரசு 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்குவதாகவும், அரசு துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்களை நிரப்புவதாகவும், மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்வதாகவும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், இதுவரை திமுக அரசு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் உள்ளது. இதனால் இளம் தலைமுறைக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், போதைப் பொருள் நடமாட்டம் நாட்டின் பல பகுதிகளில் பெருகி வருவதை கட்டுப்படுத்த திமுக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்காததால், சமூகத்தில் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, அதிமுக சார்பில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து, ஜெயலலிதா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில், மதுரை பழங்காநத்தம் எம்ஜிஆர் திடலில் அக்டோபர் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.