
அமலாக்கத்துறை அதிகாரி வழக்கை சிபிஐக்கு மாற்ற இயலாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை..
மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் மிக முக்கியமான விஷயங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவுபடுத்தி இருக்கிறது. குறிப்பாக மத்திய அரசின் அதிகாரிகள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபடும் பொழுது அதனை விசாரணை செய்வதற்கு மாநில அரசின் விசாரணை அமைப்புகளுக்கு முழு அதிகாரம் உள்ளதாக தெரிவித்திருக்கிறது.
மேலும் மாநில அரசு அதிகாரியை லஞ்ச வழக்கில் கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் என்பது இல்லை. அது ஒரு காவல் அமைப்பு.. எனவே விசாரணை செய்ய போதுமான அதிகாரங்கள் உள்ளன. மத்திய அரசு அதிகாரியை கைது செய்ததற்காக லஞ்ச ஒழிப்புத்துறை மீது நடவடிக்கை எடுக்க கோருவது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் விவேக் என்பவர் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் அமலாக்க துறையினர் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் வீடுகள் மீது சோதனையிடுவதால் பழிவாங்கும் நடவடிக்கையாக டிசம்பர் ஒன்றாம் தேதி அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டுள்ளார்.. அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். மேலும் மத்திய அரசின் அதிகாரியை மாநில அரசு அதிகாரிகள் கைது செய்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம் சுந்தர் மற்றும் சக்திவேல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசினுடைய தலைமை வழக்கறிஞர்கள் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி பல்வேறு தரப்பு விளக்கங்களை கொடுத்தனர். இந்த நிலையில் தான் இந்த வழக்கில் நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் அதிகாரிகள் தரவு தவறு செய்யும் போது பிடிபட்டால் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை ஏற்க முடியாது. இது குறித்து உச்ச நீதிமன்றம் பல மாநில உயர் நீதிமன்றங்களில் ஏற்கனவே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க சட்டரீதியானது, லஞ்சம் வாங்கும் போது மத்திய அரசு அதிகாரி கைது செய்யப்பட்டால் அவருக்கு தொடர்புடைய குடியிருப்பு மற்றும் பணி புரியும் இடம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை செய்வதற்கு, சோதனை நடத்துவதற்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே மனுதாரர் கோரிக்கையின்படி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை. மத்திய அரசு அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை மீது நடவடிக்கை எடுக்க கோருவது ஏற்புடையதல்ல. மேலும் லஞ்ச ஒழிப்பு துறையின் அதிகாரத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.