
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது பெங்களூரில் இருந்து ஊட்டிக்கு சென்ற சுற்றுலா பேருந்து மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது திடீரென ஒரு வாலிபர் மீது மோதியது. இதில் அந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வாலிபரை மருத்துவமனையில் சேர்க்காமல் பேருந்து ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவரும் சேர்ந்து அவரை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து ஓட்டுநர் சிவராஜ் மற்றும் கிளீனர் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதோடு பேருந்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.