
மராட்டிய மாநிலத்தில் முலுண்டு நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ண தாஜி(56). இவர் அப்பகுதியில் டெம்போ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரிந்து சென்றுள்ளார். பின்னர் கிருஷ்ண தாஜியின் மனைவி அவரது தாயார் பாபி தாஜி உஷாரே (72) என்பருடன் வசித்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதிலிருந்து கிருஷ்ணதாஜி தனது டெம்போவிலேயே வசித்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ண தாஜி இதற்கு முழு காரணமும் தன்னுடைய மாமியார் தான் என சந்தேகித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக மாமியார் பாபி தாஜி மருத்துவமனைக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு டெம்போவில் சென்ற கிருஷ்ணதாஜி அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் விடுவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மருமகனுடன் சென்றுள்ளார் பாபி. ஆனால் டெம்போக்குள் பாபி வந்ததும் கதவை உள்புறமாக சாத்திவிட்டு பாபியை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார்.
மேலும் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பாபி அலறியுள்ளார். மேலும் டெம்போவில் சிறிய இடமே இருந்ததால் கிருஷ்ண தாஜி மீதும் தீ பரவி உள்ளது. இதனால் இருவரும் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து டெம்போ கதவை உடைத்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.