கொல்கத்தாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மருத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து கொல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில் மருத்துவ மாணவி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் இன்று மாபெரும் பேரணி நடத்தினார்கள்.

இதனால் சுமார் 4000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அதாவது மாணவர்கள் ஹௌரா பாலத்தை அடைந்த நிலையில் தடுப்புகளை மீறியதால் அவர்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீஸ்காரர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ‌ அந்த பகுதியை போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. அதன் பிறகு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.