குஜராத்தில் ஒரு வனவிலங்கு ஆர்வலர், மயக்க நிலையில் கிடந்த விஷமற்ற பாம்பின் உயிரை காப்பாற்றுவதற்கான ஒரு அசாதாரண முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வதோதராவில் உள்ள வன விலங்கு ஆர்வலரான யாஷ் தத்விக்கு, ஹெல்ப்லைன் மூலம் பாம்பு இறந்த நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில், அவர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றார். அங்கு சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள ஒரு விஷமற்ற பாம்பு இருந்தது.

“எந்த அசைவும் இல்லை, ஆனால் பாம்பு உயிர் பிழைப்பதாக நான் நம்பினேன்,” என யாஷ் குறிப்பிட்டார். இதனால், பாம்பின் கழுத்தை பிடித்து, அதன் வாயை திறந்து, மூன்று நிமிடங்கள் சிபிஆர் (Cardiopulmonary Resuscitation) செய்ய முடிவு செய்தார். ஆரம்பத்தில், பாம்பின் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. முதல் இரண்டு முறை சிபிஆர் கொடுத்த பிறகு, யாஷ் நம்பிக்கை இழக்கவில்லை. மூன்றாவது முறையாக அவர் சிபிஆர் செய்யத் தொடங்கியபோது, பாம்பு மெல்ல நகரத் தொடங்கியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.