சென்னையில் கடந்த 2013 ஆம் ஆண்டு நரம்பியல் மருத்துவரான சுப்பையா கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் சொத்து பிரச்சனைக்காக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த கொலை வழக்கில் ஆசிரியர் பொன்னுசாமி, அவருடைய மனைவி மேரி புஷ்பம், அவருடைய மகன்களான போரிஸ், பாசில் அவருடைய நண்பர்கள் ஜேம்ஸ் சதீஷ்குமார், வில்லியம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன், செல்வ பிரகாஷ், முருகன், ஏசுராஜ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 7 பேருக்கு மரண தண்டனையும், மேரி புஷ்பம் மற்றும் ஏசு ராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2021 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பாக அனைவரும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரண தண்டனை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்து 9 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.