
வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் வசித்து வரும் ஒரு மருத்துவ பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது அந்தப் பெண் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி இந்த பெண்ணின் சடலம் கல்லூரி கருத்தரங்கு அறையில் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அதோடு சிசிடிவி காட்சிகள் மூலம் சஞ்சய் ராய் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதற்காக பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை கொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் படி ஒரு பேரணி நடத்தினார்.
இது குறித்து கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக ஓடும் பஸ்ஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் மம்தா பானர்ஜி தன் கையில் இருக்கும் அதிகாரத்தை வைத்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பொது மக்களை திசை திருப்புவதற்காக போராட்டம் நடத்துகிறார் என்றும், அவர் சூழ்நிலையை கையாள தவறியதால் பதவி விலக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கொல்கத்தாவில் உள்ள ஒரு பெண் டாக்டருக்கு பாலியல் வன்கொடுமை துயர சம்பவம் நடந்துள்ளது என்றால் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.