
நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ். இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும், பிரினித்தி (6) என்ற மகளும், பிரினிராஜ்(2) என்ற மகனும் இருந்துள்ளனர். பிரேம் ராஜ் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோகனப்பிரியாவும் அவரது பிள்ளைகளும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பிரேம் ராஜ் எழுதிய கடிதம் சிக்கியது.
அந்த கடிதத்தில் ஆன்லைன் ஆப்பில் கடந்த ஒரு வாரத்தில் 50 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. எங்களை மன்னித்து விடுங்கள் என பிரேம் ராஜ் எழுதியுள்ளார். வீட்டில் மோகனப்பிரியா மற்றும் பிள்ளைகளின் சடலம் இருந்ததால் பிரேம் ராஜை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பிரேம் ராஜ் கரூர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.