
மலேசியாவின் முன்னாள் பிரதமரும், மக்களுக்கு விருப்பமான அரசியல்வாதியுமான அப்துல்லா அஹமட் பதாவி இன்று (ஏப்ரல் 14) இருதய நோயால் பாதிக்கப்பட்டு காலமானார் என்று குவாலாலம்பூரில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் ஜாந்துங் நெகாரா’ மருத்துவமனை அறிவித்துள்ளது. 85 வயதான பதாவி கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவர் 2003 முதல் 2009 வரை மலேசியாவின் 5-வது பிரதமராக பதவியில் இருந்தார். 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவரது கட்சி மோசமான தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய அவர்மீது அழுத்தம் ஏற்பட்டு, பதவியிலிருந்து விலகினார்.
அதன்பின், பொதுமக்களைப் போல் அமைதியான வாழ்க்கையைத் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் அவரது மருமகன் கைரி ஜமாலுதின், பதாவி டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதில், அவருக்கு பேசுவதிலும், குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காணுவதிலும் சிரமம் இருப்பதாகவும் கூறியிருந்தார். பதாவி தனது அரசியல் வாழ்க்கையில் ஊழலுக்கு எதிராக திடமாகப் போராடியவர் கல்வி, இஸ்லாமிய மதக்கொள்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கியவர் எனும் வகையில், மலேசிய மக்கள் மத்தியில் இன்று வரை அவர் மதிக்கப்படுகிறார்.