திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உப்பூர் பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்தார். ஆனால் மழையின் காரணமாக அவருடைய நெல் பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் அவர் தீராத மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு தற்போது அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் இழப்பீடு வழங்க நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மழையில் நெற்பயிர் சேதமடைந்ததால் உழவர் தற்கொலை: இழப்பீடு வழங்குவதற்கு நிலையான நிவாரணத் திட்டத்தை உருவாக்க வேண்டும்! திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்ற விவசாயி, அவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் ஏற்பட்ட இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. முனியப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் பெய்த மழையில் மூன்று முறை பயிர்கள் பாதிக்கப்ப்பட்டன. ஒரு முறை மட்டும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை வழங்கப்படவில்லை. அதன்பின் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் அரசால் வழங்கப்படவில்லை. அதனால் தான் தமக்கு ஏற்பட்ட இழப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தெரியாமல் முனியப்பன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அவற்றுக்கு இழப்பீடு வழங்க நடைமுறைக்கு ஒவ்வாத விதிமுறைகளை பின்பற்றாமல், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்கும் வகையில் நிலையான நிவாரணத் திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அதன் மூலம் தான் உழவர்களின் தற்கொலையை தடுக்க முடியும். இப்போது தற்கொலை செய்து கொண்ட உழவர் முனியப்பனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துவதாக பதிவிட்டுள்ளார்.