
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது அனைத்து மாணவர்களின் கனவு. அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஞானசேகரன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஞானசேகரன் செல்போனில் ஒருவரிடம் சார் என பேசி உள்ளார். அந்த சார் யார் என்பதை தற்போது வரை காவல்துறை கண்டுபிடிக்கவேண்டும், இது கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 70 சிசிடிவியில் 56 தான் வேலை செய்கிறது என காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியான ஞானசேகரன் எப்படி பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தார்.
ஞானசேகரனை 23 ஆம் தேதி விசாரித்துவிட்டு அனுப்பியது ஏன்? அன்றே அவரை எதற்காக கைது செய்யவில்லை. மாணவி கல்லூரி குழுவிடம் புகார் அளித்ததாக காவல் ஆணையர் சொல்கிறார், அமைச்சர் புகார் அளிக்கவில்லை என சொல்கிறார். அமைச்சர் மற்றும் காவல் ஆணையரின் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காப்பாற்ற முயற்சி செய்கிறார்களா? மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை, சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.