
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளும் பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் அந்த கல்லூரிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இந்த நிலையில் திறந்த நிலை, தொலைதூர மற்றும் இணைய வழி கல்வி மூலமாக கற்றுத் தரப்படும் படிப்புகளுக்கும் யுஜிசி அங்கீகாரம் பெறுவது கட்டாயம். ஆனால் பத்து நாட்களில் எம்பிஏ ஆகலாம் என்று சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் வெளியாகி உள்ளது.
அதனால் இந்த போலியான விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் உயர்கல்வியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டங்களை குறுகிய காலத்தில் இணையவழியில் படிக்கலாம் என்று விளம்பரம் செய்து வருகின்றன. அது போலியானது, அனுமதிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல் deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.