
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த பல அருமையான திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது அதிகரித்து வருகிறது. அதன் பிறகு ஆசிரியர்கள் கோரிக்கைகள் விரைவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும்.
இதனையடுத்து பள்ளிகளின் அருகே விற்கப்படும் போதைப் பொருள்களின் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் தேர்தல் முறையில் தலைமை பண்பை வளர்க்கும் விதமாக மாதிரி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஒவ்வொரு பள்ளிகளிலும் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு தலைமை பண்பை அமைக்கும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் பள்ளி கல்வித்துறையில் செயல்படுபவர்களின் மீது புகார்கள் வரும் பட்சத்தில் அதில் உண்மை இருந்தால் கண்டிப்பாக அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்தல் மற்றும் அரசியல் குறித்த தலைமை பண்புகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் ஆகிய ஐவகை திணைகளின் பெயரில் குழுக்கள் அமைத்து மாணவர்களிடையே தலைமை பண்பை உருவாக்க ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாக உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.