
இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் நிலையில் இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வயதான விவசாயிகளுக்காக மத்திய அரசு கிஷான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் மாதம் தோறும் 55 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு விவசாயிகளின் வங்கி கணக்கில் மாதம் தோறும் 3 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு சார்பில் டெபாசிட் செய்யப்படும். ஒருவேளை விவசாயி உயிரிழந்தால் அவருடைய மனைவிக்கு ஓய்வூதிய தொகையில் பாதி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இணைய விவசாயிகள் ஆதார், வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் உங்கள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.