
ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டம் பல்லா பகுதியில் உள்ள ஒரு தனியார் பிளேஸ்கூலில் 2 வயது குழந்தை மரணமடைந்தது தொடர்பான அதிர்ச்சி சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி குழந்தை நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு இணைந்து “ஆர்மி பப்ளிக் பிளே மற்றும் கிரெச் பள்ளியில்” சோதனை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டனர். சோதனையின்போது, சுமார் 34 குழந்தைகள் இருட்டான அறைகளில் கட்டாயமாக தூங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு ஏதோ உணவு கொடுத்து உறங்க வைக்கப்பட்டது தெரியவந்தது.
மேல் மாடி அறைகளிலும் மேலும் சில குழந்தைகள் தூங்க வைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகளிடம் பேசும்போது, சிறிய தவறுக்கே “கோழி போன்று நின்று” அடிவாங்க வேண்டிய நிலை இருந்ததாக குழந்தைகள் தெரிவித்தனர். சுகாதார நிலை மிகவும் மோசமாக இருந்ததுடன், சமையலறையில் காலாவதியான கூல்டிரிங்க்ஸ், பழைய மாவு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. குழந்தைகளில் சிலருக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சோதனையை தடுக்கும் வகையில் பள்ளி நிர்வாகி பங்கேஜ் முயற்சி எடுத்ததாகவும், அவரிடம் எந்தவொரு உரிமம் அல்லது பதிவு ஆவணமும் இல்லாததும் தெரியவந்தது. 103 குழந்தைகள் இருந்தபோதும் பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை. பெண் ஊழியர்கள் பள்ளியில் இல்லாதது பாதுகாப்புக்கே கேள்விக்குறியாக உள்ளது. இரவில் தங்கும் வசதி என்ற பெயரில் பெற்றோரிடம் ₹8,000 வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
குழந்தை நலக்குழுவின் புகாரின் அடிப்படையில் போலீசார் JJ சட்டம் பிரிவு 75, 77 மற்றும் BNS பிரிவுகள் 126, 127(3)(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது பள்ளி முழுமையாக மூடப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ரிப்போர்ட் வந்த பிறகுதான் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..