
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான ரவிக்குமார் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி குமாரின் மகள் ஆஷாவுக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக கார்த்திக் மாமனார் வீட்டிலேயே தங்கி கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். சமீப காலமாக வேலைக்கு செல்லாத கார்த்தியிடம் ரவிக்குமார் ஏன் வேலைக்கு செல்லவில்லை என கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த கார்த்திக் தனது மாமனாரை தள்ளிவிட்டார். இதனால் ரவிக்குமார் அருகே இருந்த அம்மி கல்லில் விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவிக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.