கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியில் மிக்கேல் தேவசகாயம்-ஜெமி சகாயம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மின் என்ற மகள் உள்ளார். இவருக்கும் சுபாஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 40 சவரன் தங்க நகை, 2 1/2 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை மகளிடமிருந்து ஜெமி சகாயம் பெற்றுள்ளார். ஆனால் அவற்றை திரும்ப கொடுக்காமல் ஜெமி சகாயம் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்து விசாரணையில் இருந்து வருகின்றது. அது மட்டுமல்லாது இந்த பிரச்சனை காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்துள்ளது. அதனால் மாமியார் பெயரில் இருக்கும் சொத்துக்களை சுபாஷ் தனது பெயரில் எழுதி தர வேண்டும் என்று பிரச்சனை செய்துள்ளார். இதற்கு ஜெமி சகாயம் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்க சுபாஷ் திட்டம் போட்டார். அதன்படி ஜெமி சகாயம் தேவாலயத்திற்கு செல்லும் போது கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வந்து கும்பலை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அதோடு காரில் இருந்த 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் வைக்கப்பட்டிருந்த அரிவாள், கட்டை, மிளகாய் பொடி உள்ளிட்டவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல்துறையினர் ஜெமி சகாயம் கொடுத்த புகாரின் பேரில் மகள்- மருமகன் மற்றும் பிடிப்பட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ஆறு பேரையும் கைது செய்த காவல்துறையினர் தலைமுறைவான மருமகன் சுபாஷ் மற்றும் மகள் அஸ்மினை வலை வீசி தேடி வருகின்றனர்.