
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் கிருஷ்ணன் (70)-கனகா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆறுமுகம் என்ற மகன் இருக்கும் நிலையில் இவர் தனியாக வீடு கட்டி வசித்து வரும் நிலையில் தாய் தந்த இருவரும் தனியாக இன்னொரு வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 31ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் கனகாவின் வீட்டை மர்ம நபர் ஒருவர் தட்டிய நிலையில் கதவை திறந்த போது மிளகாய் பொடியை அவரின் முகத்தில் தூவி கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார்.
பின்னர் அவர் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவருடைய மருமகள் வசந்தி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது மாமியார் மற்றும் மருமகள் இடையே அடிக்கடி தகராறு வந்ததால் தன்னுடைய மாமியாரை பழிவாங்க மருமகள் திட்டமிட்டு தன்னுடைய மாமன் மகனான மைக்கேல் ராஜ் (21) என்பவரை ஏவி மாமியார் வீட்டிற்கு அனுப்பி அவரை அடித்து நகை பறிக்க வைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மைக்கேல் ராஜ் மற்றும் வசந்தி இருவரை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த தங்க சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.