
கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரப்பட்டியில் ரங்கன்-மாரியாயி தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சித்ரா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவுக்கு சௌந்தரராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏற்கனவே ரங்கன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட சேற்றில் வழுக்கி விழுந்து மாரியாயி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக மாரியாயி உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அன்று இரவே சித்ராவின் கணவர் சௌந்தரராஜனும் உயிரிழந்தார். ஒரே நேரத்தில் தாயும் கணவரும் இறந்ததால் சித்ரா மன உளைச்சலில் இருந்தார். அவர்களது இறுதி சடங்குக்கு பணம் இல்லாமல் சித்ரா தவித்தார். உடனே ஊர் பொதுமக்கள், உறவினர்கள், இளைஞர்கள் உதவி செய்து மாரியாயி மற்றும் சௌந்தரராஜன் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.