திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). அவரது மனைவி ஜனனி (24). இந்த தம்பதியினர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி முல்லை நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், 8 மாத குழந்தையை ஜனனியின் பெற்றோர் பராமரித்து வந்தனர். வருமானம் குறைவாக இருந்ததால், குடும்ப செலவுகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராற்றின் போது, பெங்களூரு சென்று வேலை பார்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என ஜனனி கூறியுள்ளார், அதற்கு லோகேஷ் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இரவு வரை வாக்குவாதம் நீடித்த நிலையில், லோகேஷ் வெளியே சென்று டிபன் வாங்கி, மனைவிக்கும் கொண்டு வந்து வீட்டிற்கு திரும்பினார். ஆனால் கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்தார். கதவை திறக்க பலமுறை முயன்றும் முடியாததால், ஜனனியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர், வீட்டில் உள்ள வாட்டர் ஹீட்டரைப் பயன்படுத்தி கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்த லோகேஷ், மனைவி ஜனனி நைலான் கயிற்றில் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த லோகேஷ்  சமையலறையில் உள்ள கத்தியை எடுத்து தனது கழுத்து மற்றும் மார்பில் கிழித்து தற்கொலைக்கு முயன்றார். அதிக ரத்தவெளியேற்றத்துடன் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து லோகேஷை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜனனியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் ஜனனி உயிரிழந்ததையால், இந்தச் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். இந்த இரங்கலுக்குரிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.