கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் காக்கத்தடம் பகுதியை சேர்ந்தவர் சல்மானுல் பாரிஸ். இவரது மகள் சியா. இந்த சிறுமிக்கு ஆறு வயது ஆகிறது. கடந்த மாதம் 29-ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க சென்று சிறுமியை தெருநாய் ஒன்று கடித்தது.

அப்போது சிறுமி தப்பி ஓட முயன்றபோதும் அந்த நாய் சிறுமியை விடாது துரத்தி தலை, கால் போன்ற பல்வேறு இடங்களில் கடித்து குதறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் தெரு நாய் கடித்தது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அவரது பெற்றோர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அங்கு சிறுமிக்கு வெறிநாய் கடிக்காக தடுப்பூசி போடப்பட்டது.

இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி வீட்டிற்கு திரும்பினார்‌. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென சிறுமிக்கு காய்ச்சல் வந்ததால் பதறிய பெற்றோர்கள் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமிக்கு ரேபிஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதனால் ரேபிஸ் நோய்க்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். வெறிநாய் கடிக்கான அனைத்து தடுப்பூசிகள் போடப்பட்டும் சிறுமி உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.