
தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படை முகாமிட்டுள்ளது. இன்று புயல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்ட நிலையில் பொதுமக்கள் யாரும் அநாவசியமாக வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் உள்ள அனைத்து நகை கடைகளும் புயல் காரணமாக மூடப்படுவதாக தற்போது மெட்ராஸ் நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் நகைக் கடைகளை மூடியுள்ளனர். மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7160 ரூபாய்க்கும், ஒரு சவரன் 57 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதேபோன்று மோசமான வானிலை காரணமாக சென்னையில் இன்று இண்டிகோ விமான சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரான பிறகு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று திரையரங்குகளும் செயல்படாது என்றும் விடுமுறை வழங்கப்படும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.