மத்தியப் பிரதேசம், கவாலியர் நகரத்தில் மனதை கலங்கவைக்கும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹேம் சிங் பரேட் பகுதியில் உள்ள மெடவ் கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நனு ராதோரே என்ற நபர், ஒரு தெரு நாயை இரும்புக் கோலால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், அவரது செல்ல நாயுடன் மேல்மாடிக்கு செல்கின்றபோது, ஒரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதே நேரத்தில், தெரு நாய் குரைத்ததைக் கேட்டவுடன், திடீரென இரும்புக் கோலால் அதை அடிக்கத் தொடங்குகிறார்.

தாக்குதல் நடந்தபோது அந்த நாய் படுக்கையிலே தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நாயை அடித்து விட்டபின்னரும், அதை மன்னிக்காமல் “நான் தான் அடிச்சேன், போய் போலீசில் புகார் போடுங்க!” என்று அதிரடியாக பதிலளித்துள்ளார் நனு. அவரது தாத்தா அந்த நாயின் காரணமாக கீழே விழுந்து தலையில் காயம் அடைந்ததாகவும் அதனால்தான் அந்த நாயை அடித்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தக் கொடூரத்தை  அருகிலிருந்த பெண் ஒருவர், வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன் போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

 


இந்த வீடியோ வைரலானதும், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நனு ராதோரே மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவர் மீது மிருகங்களின் நலன் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த தெரு நாய் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும், அதன் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விலங்குகளிடம் இவ்வாறான வன்முறை மீண்டும் நடைபெறாதவாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.