
தமிழ்நாட்டில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து காணப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இதிலும் பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட ஒரு 8-ம் வகுப்பு மாணவியை கிருஷ்ணகிரியில் மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று கடலூரில்அரசு பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தமிழ் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 6 மாணவிகளுக்கு உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (57) பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் மீதான குற்றம் உண்மை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பெருமாளை 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.