
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவேங்கடம் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர் சைல்டு ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைப்பின் அதிகாரி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது டேவிட் மைக்கேல் (37) என்ற அறிவியல் ஆசிரியர் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இது தொடர்பாக சங்கரன்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை தேடி வந்தனர். அவர் கன்னியாகுமரியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்த நிலையில் நேற்று அவரை அங்கு சென்று கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.