
மயிலாதுறை மாவட்டத்தில் ராஜ்குமார், மூவேந்தன் மற்றும் தங்கதுரை ஆகியோர் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனை யாராவது தட்டி கேட்டால் அவர்களை அடிப்பது மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த பகுதி மக்களின் குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் முட்டம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ராஜ்குமாரை கைது செய்தார்கள். இவர் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் சாராயத்தை விற்பனை செய்துள்ளார். இதனை ஒரு சிறுவன் தட்டி கேட்ட நிலையில் அந்த சிறுவனை அவர் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனை அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் மற்றும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்திருந்த ஹரி சக்தி ஆகியோர் தட்டி கேட்டனர். இதில் ஹரிஷ் பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். அதன் பிறகு ஹரி சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர்கள் தட்டி கேட்டதால் கோபமடைந்த சாராய வியாபாரிகள் மூவரும் அவர்களுடன் தகராறு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து வாலிபர்கள் இருவரையும் அவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியாகினார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து வாலிபர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜ்குமார் மற்றும் தங்கதுரை ஆகியோரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தப்பி ஓடிய மூவேந்தனை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.