
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடந்த சோகமான சம்பவம், பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடு முழுவதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதபுரம் சாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக வருகின்ற நிலையில், இன்று அதிகாலை தரிசிக்க வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சன்னியாசி ராஜ் தாஸ், கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பக்தர்கள் அவரை மீட்டுக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் கேட்டு பக்தர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக இந்த விபத்து நடந்ததா, அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விரிவாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே இதேபோன்று திருச்செந்தூரில் வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ராமநாதபுரம் கோவிலிலும் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.