சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் ஏழுமலை (41)-சங்கீதா (36) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் ஏழுமலை கொத்தனார் ஆக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மகன் சுதர்சனன் ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு 11 வயது ஆகும் நிலையில் கடந்த 24ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளான். இதனால் சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால் உடல்நிலை சீராகாததால் பின்னர் அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

நேற்று முன்தினம் சிறுவன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவன் மயங்கிய நிலையில் உடனே பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த சிறுவனின் சடலத்தை போலீசார்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும். அதே நேரத்தில் பரோட்டா சாப்பிட்டதால் தான் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.