
தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக களம் இறங்கினார். நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் டிடிவி தினகரன் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் தோல்வியை தழுவினார். இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தல் களத்துக்கு வந்த நிலையில் அப்போதைய பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் மீண்டும் போட்டியிட்டபோது காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம். ஆரூணிடம் தோல்வியை தழுவினார்.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா அவரை ராஜ்யசபை எம்.பி ஆக்கினார். இதைத்தொடர்ந்து அரசியலில் இருந்து விலகிய டிடிவி தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அவர் தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் டிடிவி தினகரன் உட்பட தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து அமமுக கட்சியின் வேட்பாளர்களும் தோல்வியை தழுவினர். மேலும் பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி தேனி நாடாளுமன்ற தொகுதியாக மாற்றப்பட்ட நிலையில் இந்தமுறை அந்த தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய டிடிவி தினகரன் தோல்வியை சந்தித்துள்ளார்.